சென்னை, 18 பிப்ரவரி 2022: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வரும் பிரபல திரைப்படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை படக்குழுவினர்
இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.
நடிகை ஹூமா குரேஷி
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹூமா குரேஷி, பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார். ரஜினியுடன் காலா திரைப்படத்திலும் நடித்திருந்த ஹூமா குரேஷி, இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தமது குடும்பத்தை குறித்தும், தான் திரைக்கு வந்த பிண்ணனி குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
மிடில் க்ளாஸ்.. நடிக்குறது என்பது பெரிய கனவு..
அப்போது பேசிய அவர், “நான் டெல்லியில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே எனக்கு கிடைத்த வாய்ப்புளுக்கு நான் மிகவும் பாக்கியம் செய்தவளாக உணர்கிறேன். என் தந்தை ரெஸ்டாரண்ட் வியாபாரம் செய்ய, அம்மா இல்லத்தரசி. நடிகையாக வேண்டும் என்பது எனக்கெல்லாம் ஒரு கனவாக இருந்தது. இன்று எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், அது கடவுளின் ஆசீர்வாதம் தானே தவிர வேறொன்றும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியவர், “என்னை போலவே பலருக்கும் இதே போன்ற கனவுகள் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். அதனால் நான் அவர்களை விட பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன் என்று இல்லை, பலர் சிறந்த நடிகர்களாகவும், திறமையானவர்களாகவும் மற்றும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், “இப்படி மிகவும் திறமையானவர்கள், மிகவும் கடினமாக உழைக்கிறவர்களுக்கும் கூட, லக், கடின உழைப்பு, சரியான நபர்களைச் சந்திப்பது, வாய்ப்புகளை பெறுவது உள்ளிட்டவை சரியான காம்பினேஷனில் கிடைக்கும்போது அவர்கள் தங்களுக்கான இடத்தை நிச்சயமாக அடைவார்கள். அதனால்தான் நான் இப்போது இங்கே உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். அதனால் நான் 200% முயற்சி செய்கிறேன், ஏனென்றால் எனது வாய்ப்புகளை வீணடிக்க முடியாது!” என்று தெரிவித்துள்ளார்.