நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார், இயக்குனர் H.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'துணிவு'.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் நடந்து முடிந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்றது. இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இணைந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை படத்தில்’ வேம்புலி கதாபாத்திர புகழ் நடிகர் ஜான் கொக்கென் தமது போர்ஷனை நிறைவு செய்துள்ளதாக தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் கதாபாத்திரங்களுக்காக தம்மை தேர்வு செய்த இயக்குநர் H.வினோத்க்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், மீண்டும் நடிகர் அஜித் குமாருடன் பணிபுரிவதால் தாம் ஆசீர்வதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளார்.
துணிவு படத்தின் ஒளிப்பதிவை நிரவ் ஷா மேற்கொள்ள, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், திரைப்படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.