தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
அதில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது." என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார்.
அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் சார்பில் அதன் ஹெட் தமிழ்குமரன், ஏகே 62 படம் குறித்து பதில் அளித்திருந்தார். படம் அப்டேட் எப்போ வரும்?" என்ற கேள்விக்கு "நல்ல செய்தி அடுத்த மாதம் வரும்" என தமிழ் குமரன் பதில் அளித்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், தனது ரசிகர் ஒருவருடன் பிரிட்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.