பிரபல அஜித் பட இயக்குநர் சரவண சுப்பையாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் சிட்டிசன் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் சரவண சுப்பையா. 2001-ல் வெளியான இந்த திரைப்படம் அஜித் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
அஜித், வசுந்துரா தாஸ், மீனா, நக்மா, தேவன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் ஹிட் திரைப்படமாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் பரவலாக இருந்தது. இரட்டை வேடங்களில் அஜித் நடித்த முக்கியமான திரைப்படமான இந்த படத்தில் இறுதிக்காட்சிகளில் சொல்லப்படும் மெசேஜ் வலிமையுடன் இருந்ததற்காக பாராட்டுகளை பெற்றது.
குறிப்பாக இந்த திரைப்படம் மூலம் அத்திப்பட்டி என்கிற ஊர் பெயர் பிரபலமானது. இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போன அத்திப்பட்டி கிராமத்தின் பின்னணியை மையமாக வைத்து பழிவாங்கும் ஹீரோவின் கதைதான் சிட்டிசன். எனினும் சிட்டிசனின் நோக்கம் பழிவாங்குவதல்ல என்பதையும் தப்பு பண்ணுபவர்களுக்கு பயம் வரவேண்டும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கான தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக இருக்கும்.
இந்த திரைப்படத்துடன் ஏபிசிடி மற்றும் அண்மையில் ‘மீண்டும்’ என்கிற திரைப்படத்தையும் இயக்கிய சரவண சுப்பையா பல்வேறு முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்ட சரவண சுப்பையாவுக்கு தற்போது டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது சமூக வலைப்பக்கத்தில் அவர் தாம் பெற்ற டாக்டர் பட்டத்துடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.