நடிகர் சூர்யா நடித்த படங்களில் இருந்த விஷயங்கள் பிற்காலத்தில் சமூக நிகழ்வுகளோடு ஒத்துப் போயின.
இதனை அடுத்து “அன்றே கணித்த சூர்யா” என்கிற வகையில் பல மீம்களை மீம் கிரியேட்டர்கள் உருவாக்கினர். உதாரணமாக சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனர்கள் உண்டுபண்ணும் வினோத பயோ வார், ஊருக்குள் ஒரு நோயை உண்டு பண்ணுவது பற்றி கூறப்பட்டிருக்கும். இதனை பலரும் தற்போது கொரோனா நோய், சீனாவின் வுஹான் ஆராய்ச்சி மையத்திலிருந்து உருவாகியதை தொடர்புபடுத்தி “அன்றே கணித்த சூர்யா” என மீம்கள் போடத் தொடங்கினர்.
இந்நிலையில், ‘தல’ அஜித் நடித்த‘பில்லா’ திரைப்படத்தை குறிப்பிட்டு “அன்றே கணித்த அஜித்” எனும் வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகின்றன. அஜீத் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படம் பில்லா. ரஜினி நடித்த பழைய பில்லா படத்தின் ரீமேக் படமான இந்த திரைப்படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் அஜித் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் மலேசியாவில் வாழும் அஜித், மலேசிய முருகன் கோவிலுக்கு முன்பாக “சேவல் கொடி பறக்குதடா” எனும் பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.
இந்த படத்தில் வரும் சேவல் கொடி பறக்குதடா பாடலில் பாடலாசிரியர் பா.விஜய் ""தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?"" என்கிற வரிகளை எழுதி இருப்பார். இந்த வரிகள்தான் தற்போது “அன்றே கணித்த அஜித்” என்கிற வார்த்தைகள் வைரல் ஆகி வருவதற்கு காரணம்.
அண்மையில் தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த திட்டம் அஜித் நடித்த பாடலில் வரிகளாய் வந்துள்ளதை தொடர்புப் படுத்தி தான் இந்த பாடல் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தல அஜித் H.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ‘நாங்க வேற மாரி’ எனும் முதல் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், 2வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. வலிமை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.