சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் "திரு.அஜித் குமார் நடிப்பில் திரு.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எங்களின் அடுத்த திரைப்படம் "AK 62", திரு.அனிருத் இசையமைக்க, திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் எங்களின் அடுத்த படத்தை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்! காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். மதிப்புமிக்க AK62 க்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் இந்த சிறந்த வாய்ப்பிற்கு நன்றி அஜித் சார் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியாது. என் ராஜா அனிருத் உடன் மீண்டும் & லைகா புரொடக்ஷன்ஸ்" என ட்வீட் செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனை, நெல்சன், பா ரஞ்சித், பாக்யராஜ் கண்ணன், வெங்கட்பிரபு, கவின் ட்வீட் மூலம் வாழ்த்தியுள்ளனர். மேலும் அனிருத், "AK62 - ல் மீண்டும் அஜித் சாருக்கு இசையமைக்க உற்சாகமாக உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களின் இசை எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். லைகா புரொடக்ஷன்ஸ் முன்னோக்கி மற்றும் மேல்நோக்கி!" என கூறியுள்ளார்.