தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் "வலிமை" படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஐத்ராபாத்தில் நடைபெறும் BMW கண்காட்சிக்கு வந்திருந்த தல அஜித்துடன் சக பைக் ரேஸ் வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகின்றன. அதில் ஒன்று தான் நடிகர் நவ்தீப் தல அஜித்துடன் எடுத்த புகைப்படம்.
தல அஜித்தும், நவ்தீப்பும் 2008 ஆம் ஆண்டு ராஜூ சுந்தரம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், அர்ஜூன் ஜெனா ஒளிப்பதிவில் வெளியான ஏகன் படத்தில் அண்ணன்- தம்பியாக நடித்து இருந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்ததை பற்றி நவ்தீப் டிவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார். "இந்த மனிதன் தூய அன்பை உடையவர். அவருடைய "ஹாய்" யின் தொனி, நாம் சந்தித்ததில் இருந்து பல வருடங்கள் ஆகிவிட்டனவா என்று வியக்க வைக்கிறது, அவருடைய எளிமையும் நுண்ணறிவுள்ள குணமும் ஒரு பேரின்ப அனுபவம்! உண்மையிலேயே அஜித் அற்புதமான மனிதர். இந்த காரணத்திற்காக தான் அவர் "தல" !!!." என்று குறிப்பிட்டுள்ளார்.