நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு, இருவரும் பிரிய போவதாக அறிவித்திருந்தனர்.
இரண்டு பேரும் மனமொத்து பிரிவதாக கூறி, ஒரே மாதிரியான அறிக்கையை பகிர்ந்து இருந்தார்கள். அவர்களின் இந்த முடிவு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தனிப்பட்ட வேலைகள்
தொடர்ந்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் தனிப்பட்ட வேலைகளில், அதிக கவனம் செலுத்த தொடங்கினர். அடுத்தடுத்து திரைப்படங்களில், தனுஷ் பிசியாக நடித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பாடல் இயக்கம் ஒன்றில் தீவிரம் காட்டி வந்தார். முன்னதாக, '3' மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். மேலும், ஒரு ஆவணப்படம் ஒன்றையும் அவர் இயக்கியிருந்தார்.
மீண்டும் இயக்கம்
இதனைத் தொடர்ந்து, சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்தின் பக்கம் திரும்பியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல் வீடியோ ஒன்றை இயக்கி வந்தார். இது தொடர்பான அப்டேட்களை ஐஸ்வர்யா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்தும் வேலை
இதன் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸ் செய்வதற்கு மத்தியில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, குணமடைந்த பிறகு, மீண்டும் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இருந்து கொண்டே, பாடலின் வேலைகளில் அவர் ஈடுபட்டு வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரபலங்களின் பாராட்டு
தமிழில் 'பயணி' என்றும், தெலுங்கில் 'சஞ்சாரி' என்றும், மலையாளத்தில் 'யாத்ரக்காரன்' என்றும் இந்த பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை தங்களின் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
இயக்கத்தில் கம்பேக் கொடுத்துள்ள மகளை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த், நெகிழ்ந்து போய் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ராணா, துல்கர் சல்மான், எஸ் ஜே சூர்யா, சிரஞ்சீவி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள், மீண்டும் டைரக்ஷன் பக்கம் கம்பேக் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இந்த ஆல்பத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி நடித்துள்ளார். அன்கித் திவாரி இசையமைத்துள்ள இந்த பாடலை, தமிழில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.