சமீபத்தில் IIM திருச்சியில் நடந்த TEDx மேடையில், மாணவர்களிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் வெற்றிப் பயணத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, ‘நான் லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலியை சேர்ந்த பொண்ணு. ஹவுசிங் போர்ட், ஸ்லம்னு சொல்வாங்க இல்லை, அந்த வீட்ல தான் வளர்ந்தேன்.
என்னோட அப்பா எனக்கு எட்டு வயசு இருக்கும் போது இறந்துட்டாரு. நாங்க நாலு குழந்தைங்க...என் அம்மாதான் எங்களை வளர்த்தாங்க. என்னை படிக்க வைச்சாங்க. இன்னிக்கு நான் யாரா இருக்கேனோ அதுக்கு அவங்கதான் முதல் காரணம். இத்தனைக்கும் என் அம்மா படிக்காதவங்க. என்னோட தாய்மொழி தெலுங்கு. அவங்களுக்கு தெலுங்கைத் தவிர எந்த மொழியும் பேசத் தெரியாது.
மும்பைக்கு தனியா போய் புடவைங்க வாங்கிட்டு வந்து, அதை இங்க தெரிஞ்சவங்க இருக்கற ஒவ்வொரு இடத்துக்கும் பஸ்லேயே போய் வித்துட்டு வருவாங்க. எல் ஐ சி ஏஜென்சி எடுத்து பாலிஸி எடுத்துக்கங்கன்னு ஒவ்வொருத்தரையா கேட்டுட்டு இருப்பாங்க. அப்படி கஷ்டப்பட்டுத்தான் என்னை நல்ல ஸ்கூல்ல, எத்திராஜ் காலேஜ்ல எல்லாம் படிக்க வைச்சாங்க.
திடீர்னு ஒரு நாள் என் பெரிய அண்ணன் சூசைட் பண்ணிக்கிட்டான். அப்ப எனக்கு 12 இல்ல 13 வயசுதான் இருக்கும். அவன் பேர் ராகவேந்திரா. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்ட்டாங்க. பக்கத்துல யாராவது இறந்துட்டாங்கன்னாலே நமக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும், சொந்த மகன் போய்ட்டான்னா ஒரு அம்மாவோட மனநிலை எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க.
அதுக்கப்புறம் என்னோட ரெண்டாவது அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சு ஒரு வேலைக்கு போனார். அவரோட முதல் சம்பளம் பதினஞ்சாயிரம் ரூபா. என்னோட அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். குடும்பத்தை ஓட்டறதுக்கு ஒருத்தன் வந்துட்டான்னு இனி பிரச்சனையில்லைன்னு நினைச்சவங்களுக்கு பெரிய இடி. அவன் ரோட் ஆக்ஸிடென்ல இறந்துட்டான். எங்க அம்மாவால இந்த துக்கத்தை தாங்கிக்கவே முடியலை. ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க.
இப்ப குடும்பத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துச்சு. என்னோட முதல் வேலை ப்ளஸ் ஒன் படிக்கறப்ப ஒரு சூப்பர் மார்கெட்ல தொடங்கிச்சு. வாசல்ல நின்னு ஒரு சாக்லேட் புரொமோஷன், எல்லாரையும் வழிமறிச்சு இதை கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்லணும். அதுல 220 ரூபா சமாதிச்சேன். அதுக்கப்பறம் ஈவெண்ட் பண்ண ஆரம்பிச்சேன். பர்த்டே பார்டீஸ், இப்படி எல்லாத்துலயும் மாசம் 5000 ரூபா சம்பாதிச்சேன். ஆனா ஒரு குடும்பத்தை ரன் பண்ண இது பத்துமா?
சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சு சீரியல்ல நடிக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த சமயத்துல மானாடா மயிலாட டைட்டில் வின் பண்ணேன். அதை வைச்சு ட்ரை பண்ணலாம்னு பாத்தப்ப சீரியல்ல நடிச்சா ஒரு நாளைக்கு 1500 ரூபாதான் கிடைக்கும்னு சொன்னாங்க. மாசத்துக்கு நாலு அல்லது அஞ்சு நாள் ஷூட் இருக்கும். ஆனால் இது எனக்கு போதும்னு தோணலை அம்மாகிட்ட கேட்டப்ப அவங்க சினிமா சஜஸ்ட் பண்ணாங்க. சரி சினிமாலை ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன்.
அது வேற உலகம், அங்க ரொம்பவே சிரமப்பட்டேன். முதல் படம் அவர்கள் ஆனால் அது சக்ஸஸ் ஆகலை. தொடர் தோல்விகள், அவமானங்கள் இப்படியே போயிட்டு இருந்தது. சினிமா கம்பெனிக்கு வாய்ப்பு தேடி போகறப்ப எனக்கு எப்படி ட்ரெஸ் பண்ணிட்டு போகணும்னு கூட தெரியாது; என்னோட கலர் என்னோட பர்சானாலிட்டி இதெல்லாம் பாத்து சில இயக்குநர்கள் மூஞ்சிக்கு நேராவே சொல்லியிருக்காங்க, நீங்க ஹீரோயின் மெட்டீரியல் இல்லை. ட்ரை பண்ணாதீங்க வேற வேலை பாருங்கன்னு.
இன்னும் சில இயக்குனர்கள் உனக்கு காமெடியனுக்கு ஜோடியா நடிக்க சான்ஸ் தரேன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. ஒரு நல்ல ரோல், அதுதான் என் கனவு. அப்பறம்தான் அட்டகத்தி படத்துல அமுதாங்கற சின்ன காரெக்டர் கிடைச்சுது. அதுல மக்கள் என்னை ரசிச்சாங்க. என்னோட வாழ்க்கையை புரட்டிப் போட்டது காக்கா முட்டை படம்தான். ஸ்லம் ஏரியாவில் வாழற பொண்ணு. ரெண்டு குழந்தைங்கு அம்மாவா நடிக்கணுங்கறப்ப பலர் அந்த ரோலை ஏத்துக்கலை.
எனக்கு ஸ்க்ரிப்ட் பிடிச்சுது. நடிச்சேன். படம் பெரிய ஹிட். என்னோட இயக்குனர் மணிகண்டன்கிட்ட நடிப்புன்னா என்னன்னு அப்பதான் சரியா கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி நான் பெரிசா நடிக்கலை. இப்பகூட நான் கத்துக்கிட்டு தான் இருக்கேன். காக்கா முட்ட ஹிட் அடிச்சாலும் எனக்கு வாய்ப்பு எதுவும் வரலை. பெரிய ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கற எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைக்கலை. மறுபடியும் ஒரு வருஷ போராட்டம்.
சிலர் என்னோட திறமைகளைப் பாராட்டினாங்க. ஆனா அதை வைச்சு என்ன செய்ய முடியும். அடுத்தடுத்து நடிச்சாதானே மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியும். என்னோட படத்துல நானே ஹீரோவா எப்படி இருக்கும்னு நினைச்சேன். கனா படத்துல நடிச்சதுதான் இன்னொரு திருப்புமுனை. அந்த படத்துல ஒரு கிரிக்கெட்டியரா நடிச்சேன். அதுக்காக ஆறுமாசம் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன். அந்தப் பட வெற்றிக்கு அப்பறம் அடுத்தடுத்து அஞ்சு படம் பெண் மைய கதாபாத்திரங்களா கிடைச்சுது.
விஜய் சேதுபதியோட தர்மதுரையிலும், தனுஷ் சாரோட வடசென்னை படத்துல நடிச்சதும் மறக்க முடியாத சந்தோஷங்கள். திடீர்னு பெரிய வாய்ப்புக்கள் வர ஆரம்பிச்சது. என்னோட எல்லா வெற்றிக்குமான காரணம் ஒரே ஒரு விஷயம்தான். நான் என்னை நம்பினேன். என்னை மட்டுமே நம்பினேன். எனக்கு யாரும் இல்லை சப்போர் பண்ணறதுக்கு. அதனால எனக்கு நான்தான் சப்போர்ட்னு முடிவு பண்ணேன். ஜெயிச்சேன்.
நிச்சயம் இந்த பாதையில பல பிரச்சனைகளை கடந்து வந்தேன். யாராவது அப்யூஸ் பண்ணா நிச்சயம் திருப்பி கொடுங்க. பெண்களைப் பொருத்தவரை தைரியம் ரொம்ப முக்கியம். என்னை எவ்வளவோ ரிஜெக்ட் பண்ணாங்க, கமெண்ட் பண்ணாங்க ஆனா எல்லாத்தையும் மீறி இன்னிக்கு வெற்றியை சுவைக்கறேன். என்னால இது முடியறப்ப நிச்சயம் உங்களாலயும் முடியும். இதுதான் என்னோட லைஃப் ஸ்டோரி’.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் நெகிழ்ச்சியாக தன் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களையும், தன்னுடைய வெற்றிக் கதையையும் மனம் திறந்து பகிர்ந்தார். இது மாணவர்கள் இடையே பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.