வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. 'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல், KPY வன்னியரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர்.
டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் 'சொப்பன சுந்தரி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இப்படத்தை ஒட்டி பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தீபா மற்றும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக வெளியான சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேசமயம் டிரெய்லரின் வரும் குறிப்பிட்ட ரேப் குறித்த வசனம் சர்ச்சைக்குள்ளானது, இதுபற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “குறிப்பிட்ட அந்த கண்டண்ட் குறித்து நானும், இயக்குநரும் அவ்வளவு விவாதித்த பின்பே வைத்திருக்கிறோம். டிரெய்லரை பார்த்துவிட்டு முடிவுக்கு வரவேண்டாம். அந்த காட்சியை திரைப்படத்தில் பாருங்கள். அப்போதும் கன்வின்சிங்காக இல்லை என்றால் அப்போது கேட்கலாம். அந்த காட்சியில் எதற்காக அப்படி வைத்திருக்கிறோம் என்றால், அதன் பின்னணியில் இருக்கும் ஒரு ஆழமான விஷயத்துக்காக, அந்த காட்சி அவ்வளவு அழகாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும் பேசிய இயக்குநர், “குறிப்பிட்ட அந்த காட்சியில் மிகவும் பயந்தேன். ஆனால் சென்சார் அந்த காட்சியை பார்த்துவிட்டு, மிகவும் பாராட்டியதுடன் U சான்றிதழ் கொடுத்தார்கள். அதை பார்த்ததுமே அது ஆடியன்ஸ்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது நியாயம் என்பது புரியவரும்” என குறிப்பிட்டார். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஅஜேஷ், “அது தப்பா இருந்தால் U சான்றிதழ் கிடைத்திருக்காது இல்லயா?!” என்றார்.