நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் தம்முடைய சொகுசு காருக்கான நுழைவு வரி விலக்கு கேட்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அண்மையில் தான் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தம்முடைய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு, முதலில் வரிவிலக்கு கோரிக்கைக்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் விஜய் இந்த கோரிக்கையுடன் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் விஜய் மேல்முறையீடு செய்வதற்கு எதிரான உத்தரவு மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவருடைய மேல்முறையீட்டு வழக்கு பதிவுத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட உத்தரவிடப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மனுவின் அண்மைக்கால விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் நடந்தது.
இதேபோல் நடிகர் தனுஷ் நுழைவு வரி விலக்கு கேட்டு கோரியிருந்த மனுவும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி தனுஷ் வைத்திருந்த சொகுசு காருக்கான நுழைவு வரியாக 60 லட்சத்து 66 ஆயிரம் வணிகவரித்துறை கேட்டிருந்தது.
ஆனால், தனுஷ் வாங்கிய காரின் விலையே, வரிக்கு நிகராக இருப்பதாக பலரும் கூறும் நிலையில், முன்னதாக தனுஷ் தமக்கான வரி மதிப்பீட்டை குறைக்கச் சொல்லி கோரியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 50% வரியை தனுஷ் கட்டியவுடன் காரை பதிவு செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இப்படி 2015 ஆம் தேதி தனுஷ் தாக்கல் செய்த இந்த கோரிக்கை மனு, அதன் பின்னர் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், இந்த மனு நாளைய (ஆகஸ்டு 5, வியாழக் கிழமை) தினம் தள்ளி விசாரிக்கப்படவுள்ளது.
கடந்த 2011-இல் நுழைவு வரி விதிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.