தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த பாடகி சின்மயி, தற்போது மீண்டும் தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகியான சின்மயி, டப்பிங் கலைஞரும் கூட, பல முன்னணி ஹீரோயின்களுக்கு அவர் டப்பிங் பேசியுள்ளார். கடந்த ஆண்டு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96’ திரைப்படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியிருந்தார்.
தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சந்தா கட்டாத காரணத்தால், சின்மயி டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி அறிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழ் திரைப்படங்களுக்கு இனி டப்பிங் பேச முடியாது என சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனுக்கு, சமந்தாவுக்காக பாடகி சின்மயி டப்பிங் பேசியுள்ளார். ‘ஓ பேபி’ திரைப்படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் ரீமேக்காகி நல்ல வரவேற்பை பெற்றது. போட்டோ ஸ்டூடியோவுக்குச் செல்லும் வயதான பெண், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தை பெறுகிறார். அதன் பின் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகக் கூறும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும், இளம் தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நாக சௌர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார்.