சுஷாந்த் சிங் குடும்பத்தில் இன்னொரு மரணம் - துக்கம் தாங்காமல் இறந்துவிட்ட சகோரரின் மனைவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதிச் சடங்கு முடிந்து, மும்பையில் வைல் பார்லேவிலுள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது தந்தை கே.கே.சிங் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் திங்கள்கிழமை மாலை மகனின் இறுதி சடங்குகளுக்காக பாட்னாவிலிருந்து வந்தனர்.

சுஷாந்த் சிங்கின்  தற்கொலை ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் அதிர்ச்சி அளித்தது. அவரது குடும்பத்தாருக்கு இது ஈடு செய்ய முடியாத பேரழப்பு. இந்த இளம் நடிகரின் தற்கொலை செய்தி அறிந்து பலத்த அதிர்ச்சி ஏற்பட்ட அவரது சகோதரரின் மனைவி, இரண்டு நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் துயரத்தில் இருந்துள்ளார். சுஷாந்தின் மறைவை அவரால் தாங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கஸின் (ஒன்றுவிட்ட சகோதரர்) மனைவி சுதா தேவி அவரது மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்ததாகவும், சுஷாந்தின் தற்கொலை பற்றி அறிந்த பிறகு சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் சுஷாந்த் சிங்கின் குடும்பம் இறுதி சடங்குகளைச் செய்தபோது, ​சுதா ​தேவி தனது சொந்த ஊரான பீகாரிலுள்ள பூர்ணியாவில் காலமானார்.

சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, தனது பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவரது உடல் காவல்துறையினரால் கோவிட் -19 சோதனை மற்றும் உடற்கூறு பரிசோதனைக்காக மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலிவுட் நடிகரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கு காரணம் மூச்சுத் திணறல்தான் என்று கூறினர்.

இது தற்கொலை வழக்கு என்று போலீஸார் சந்தேகித்த நிலையில், சுஷாந்தின் உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் அளித்துள்ளனர்,  சுஷாந்த் சிங் வீட்டில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் மரணத்தில் 'தொழில்முறை போட்டி' இருக்கலாம் என்ற கோணத்திலும் மும்பை காவல்துறையினர் விசாரணை செய்வார்கள்  என்று கூறியுள்ளார்.

சுஷாந்தின் இறுதிச் சடங்கில் வருண் சர்மா, க்ருதி சனோன், ஷ்ரத்தா கபூர், ரன்வீர் ஷோரே, விவேக் ஓபராய், கிரிஸ்டல் டிஸோசா மற்றும் திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

After Sushant Singh Rajput' death Sister in law Passes Away

People looking for online information on RIP sushant, Sushant Singh Rajput will find this news story useful.