சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார். அவரது மரணம் தற்கொலைதான் என்று கூறப்பட்டாலும், அதற்குப் பின்னணியில் சதி இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
உடற்கூறு பரிசோதனை முடிந்த பின் நேற்று மாலை சுஷாந்த் சிங்கின் உடல் மும்பையிலுள்ள வைல் பார்லே மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவினால் மிகுந்த துக்கத்துக்குள்ளான அவரது சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர் சுஷாந்த் தகனம் செய்யப்பட்ட அதே சமயத்தில் காலமானார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இப்படி அடுத்தடுத்து இறந்தது அக்குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் தனது தந்தையை ஃபோனில் அழைத்ததாகவும், விரைவில் அவர் பாட்னாவுக்கு வருவதாகவும், எங்காவது மலைப் பகுதிக்கு வாக்கிங் அழைத்துச் செல்வதாகவும் கூறியிருக்கிறார். சுஷாந்த் சிங் பாட்னா வீட்டைப் பராமரித்து வரும் லட்சுமி தேவி கூறுகையில், "ஆனால் அவர் வரவில்லை, அதற்கு பதிலாக அவரது மரணச் செய்திதான் வந்தது," என்றார்.
இதனால் நிலைகுலைந்த கே கே சிங் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளார். மகனின் மறைவைத் தாங்க இயலாத அவரது உடல்நிலை அப்போதிலிருந்து பாதிப்படைந்து விட்டது. அவர் ஏற்கனவே சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்ந நிலையில், இளம் வயதில் மகன் தற்கொலை செய்து இறந்தது அவருக்குப் பேரிடியாக இருந்துள்ளது. ஏற்கனவே இதயத்திலும் பிரச்சனை இருந்ததால் அவரால் இதை தாங்க முடியவில்லை. தற்போது அவர் தளர்வாக இருப்பதாகவும் விரைவில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.