காட்மென் வெப் தொடர் குறித்து சர்ச்சைகளையடுத்து, படக்குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். இத்தொடர் Zee5 ப்ளாட்ஃபார்மில் ரிலீஸாவதாக இருந்தது. இதனிடையே கடந்த வாரம் காட்மேன் தொடரின் டீசர் வெளியானது. அதில் இடம்பெற்ற காட்சிகள், குறிப்பிட்ட ஒரு தரப்பினரை தரக்குறைவாக சித்தரிப்பதாக உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து, Zee நிறுவனம், காட்மேன் தொடரின் ரிலீஸை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதனிடையே காட்மேன் படக்குழு சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ''காட்மேன் தொடரின் டீசரில் இருந்த காட்சிகள், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக கூறி, பலர் புகார் அளித்து வருகின்றனர். மேலும் இத்தொடரின் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி குறித்து அவதூறுகளை பலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி இதன் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கும் தொலைப்பேசி மூலமாக அவர்கள் வசைப்பாடி வருகிறார்கள். இதையடுத்து காட்மேன் வெப் தொடரின் ரிலீஸை Zee நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
அந்த டீசரில் இடம்பெற்ற வசனங்களின் உண்மை தன்மை என்ன, இதன் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை என்ன, உள்ளிட்டவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், இப்படைப்பை தடை செய்வது, ஃபாசிச நடவடிக்கையாகும். இதற்கு எதிராக நாம் அனைவரும் திரள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் இதை கையெழுத்து இயக்கமாக முன்னெடுத்து தமிழக முதலமைச்சர் அலுவலகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் கொண்டு செல்வோம். இந்திய சினிமா மற்றும் ஊடக சுதந்திரத்தை காப்போம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.