ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் டெல்லியில் நிலநடுக்கத்தை, தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது ட்வீட்டில், “டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருக்களில் உள்ளோம். இங்கு என்சிஆர் முழுவதும் பலத்த நடுக்கம். சுனாமிக்குப் பிறகு இந்த நிலநடுக்க அனுபவம். இந்த நடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள் மற்றும் சரவிளக்குகள் அப்படியே நகர, சோஃபாக்கள் அலறுவது போல் இருந்தது, கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம் எங்களை வேகமாக வெளியேறச் சொல்ல, நாங்கள் வீட்டுக்கு வெளியில் வந்துவிட்டோம். அனைவரும் வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதேபோல் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் காஷ்மீரில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் லியோ படப்பிடிப்பு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அப்பட எழுத்தாளர் ரத்னகுமார் உறுதிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியான கொஞ்ச நேரத்திலேயே, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தாங்கள் நலமாக உள்ளதாக வடிவேலு சந்திரமுகி பங்களாவுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டே செல்லும் மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்து கூறியுள்ளனர்.