தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க, மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் அத்தியாவசிய தேவைகள் தவிர திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மளிகைக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு சில மாதங்களுக்கு சமூக விலகலை கடைபிடிக்க எங்கள் திரையரங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களது தியேட்டர் 767 இருக்கைகள் கொண்டது. அதில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அளிக்கவுள்ளோம். மேலும் இடைவேளையின் போது இருக்கைக்கே வந்து ஆர்டர்கள் எடுத்துக்கொள்வோம். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.