பிரபல நடிகர்கள் ஜெமினி கணேசன் - சாவித்ரி அவர்களின் பேரனான அபினய் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் அமைதியாகவே வலம் வந்தார்.
முன்னதாக பலூன் டாஸ்கில் விதிமீறல் தொடர்பாக அண்ணாச்சி கேட்டபோது கொந்தளிக்கத் தொடங்கிய அபினய், அப்படி எல்லாம் ரூல்ஸ் இல்லை என்று கூறினார். அதன் பின்னர் அபினய் - பாவனி இடையேயான பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் இல்லாமல் மெல்லிய சண்டையாக இருந்தன.
எனினும் அபினய் அனைவராலும் அறியப்படக் கூடியவராகவும், கவனிக்கப்படுபவராகவும் வளர்ந்தார். இதனிடையே அண்மைக்காலமாகவே அபினய் மற்றும் நிரூப் இருவருக்குமான வாதங்கள், முரண்கள், மனஸ்தாபங்கள் தொடர்ந்தன. முன்னதாக கண்ணாடி டாஸ்கில், அபினய் போலியாகவும், தன்னைக் கவனி வைப்பதற்கான அல்லது தன் வார்த்தைகள் செல்லுபடி ஆவதற்கான முயற்சிகளை திட்டமிட்டு செய்ததாகவும் நிரூப் குற்றம் சாட்டினார்.
இந்த பேச்சின் இறுதியிக் அபினய் கண்ணீர் விட்டார். பின்னர், நிரூப்புடனான பேச்சுகளை அபினய் குறைத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து எல்லா நேரத்திலும் கேப்டன் டாஸ்க் என்று வந்தால் மட்டும் அபினய் மற்றும் நிரூப் இருவருக்குமிடையேயான போட்டி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இம்முறை அதிக எடைக்கு பஞ்சுகளை சேகரிக்கும் ஒருவரை, மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடந்தது.
இதில் அபினய் வென்றார். அவர் வெற்றி அடைந்த பின்னர் இந்த டாஸ்கின் இறுதியில் நிரூப் மற்றும் பாவனி இருவரும் அவரவர் நாணயத்திற்கு கொடுக்கப்பட்ட கேப்டனை மாற்றக்கூடிய சலுகையை பயன்படுத்துகிறீர்களா? என பிக்பாஸ் கேட்டதற்கு இருவருமே இல்லை என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து இந்த வார கேப்டனாக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரையும், இந்த வாரம் பிக்பாஸ், வீட்டுக்குள் மீண்டும் நுழைந்திருக்கும் அபிஷேக் இருவரையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.