தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் நடித்து வரும் படத்தில் தான் நடிகர் விவேக் கடைசியாக நடித்துள்ளார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே அவர் நடிக்கும் வெள்ளித்திரை படத்தையும் இயக்கி வருகின்றனர்.
இந்த அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கூறும்போது " நான் உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன் என் பத்மஸ்ரீ @actorvivekh சார் 😞 எனது முதல் தமிழ் படத்தில் உங்களைப் போன்ற ஒரு லெஜெண்ட் உடன் பணியாற்றிய எனது அனுபவம் மறக்க முடியாதது. இந்த இழப்பால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் என்னை கவனித்துக்கொண்டீர்கள், ஏன் உலகத்தையே கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் காமெடி டைமிங் & உரையாடல்கள். மரங்கள் மீதான உங்கள் அன்பு மறக்க முடியாது. விவேக் சாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்.#RIPVivek எல்லாவற்றிற்கும் நன்றி ஐயா" என்று கூறியுள்ளார்.