பிரபல நடிகை சுனைனா தனது திரையுலக வாழ்வு குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் சுனைனா. அதன்பிறகு வம்சம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த சுனைனா அதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். பின்னர், மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் சுனைனா நடித்திருந்தார்.
இந்நிலையில் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடிகை சுனைனா அளித்திருக்கிறார். ஸ்நூக்கர் விளையாடியபடி கேஷுவலாக தன்னுடைய பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது நீங்களே திரைக்கதை எழுதி, நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த ஹீரோவை தேர்ந்தெடுப்பீர்கள்? என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுனைனா," பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் விஜய் இவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுப்பேன்" என்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் LCU-வில் இவர்கள் அனைவருமே இடம்பெற்றிருப்பது குறித்து அவர் பேசுகையில்,"நான் லோகேஷ் கனகராஜ் இல்லை. மூவரையும் வைத்து ஒரே நேரத்தில் படம் எடுப்பதற்கு" என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனக்கு விக்ரம் படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இதனிடையே, கதாநாயகர்கள் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் ஊதியமாக பெறுவதாக தகவல்கள் வருவது குறித்து சுனைனா பேசுகையில்,"சிலர் என்னிடம் பேசும்போதும் இதை சொல்லுவதுண்டு. சில நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று. அப்போது இவ்வளவு பணத்தை வாங்கி என்ன செய்யப்போகிறார்கள்? என எனக்கு தோன்றுவது உண்டு" என்றார்.
தொடர்ந்து தன்னுடைய முதல் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என குறிப்பிட்ட சுனைனா,"என்னை பொறுத்தவரைக்கும் மக்கள் நம்ம நடிப்பை எப்படி கொண்டாடுறாங்க அப்படிங்குறது தான் முக்கியம். காதலில் விழுந்தேன், சில்லு கருப்பட்டி படங்களை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். நான் இருப்பது அவர்களுக்கு தெரியாது. சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்திரக்கனி சாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சியின்போது ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள். அந்த தருணம் தான் முக்கியம். அதற்காகவே படங்களை நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.