தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கும் சஞ்சனா திவாரி படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். வாரிசு' படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா திவாரி நமது Behindwoods சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பிரபலமானா சஞ்சனாவின் முதல் படம் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி பேசியுள்ள அவர்,"நான் ஆரம்பத்தில் இருந்தே விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகை. ஆடிஷனுக்கு பெரிய நம்பிக்கை இல்லாமல் தான் சென்றேன். ஆனால், சில நாட்களுக்கு பிறகு எனக்கு போன் வந்தது. அதில் நான் செலெக்ட் ஆகிவிட்டதாக கூறினார்கள். என்னால் அதனை நம்பவே முடியவில்லை. முதல் நாள் ஷூட்டிங்கில் நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போது விஜய் சார் வந்தார். அவரை பார்த்ததும் நான் ஷாக் ஆகி அப்படியே நின்றேன். அவர் ஹாய் என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்த அனைவரிடமும் அவர் ஹாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவர் ஹாய் சொல்லியும், பதில் சொல்லவில்லையே என வருத்தப்பட்டேன். ஆனால், அடுத்தநாள் அவரிடம் போய் தயக்கத்துடன் பேசினேன். ரொம்ப சகஜமாக என்னிடம் பேசினார். அதன்பிறகு எப்போதும் நான் ஹாய் சொல்வேன். பதிலுக்கு அவரும் ஹாய் என்பார்" எனத் தெரிவித்தார்.