டாக்கா: பிரபல வங்காளதேச நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்க தேசத்தில் பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (45). ரைமா இஸ்லாம் ஷிமு, கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர், 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், டி.வி சீரியல்களிலும் நடித்துள்ளார். வங்கதேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தவர். நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இவரின் சடலம் சாக்கு மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டைக்குள் பிணமாக கண்டுடெக்கப்பட்டுள்ளார். உள்ளூர்வாசிகள் சிலர் தகவல் கொடுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நடிகையின் சடலத்தை காவல்துறை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரைமா இஸ்லாம் ஷிமுவின் கணவர், கடந்த ஞாயிறு அன்று தனது மனைவியை காணவில்லை என்று கலாபகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மறைந்த நடிகையின் உடலில் பல காயங்கள் காணப்பட்டதை அடுத்து கணவர் அலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது மனைவியைக் கொலை செய்ததில் தனக்குத் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அலி 3 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். டாக்கா காவல்துறையின் வாக்குமூலத்தில் அவர் இந்த கொலையில் ஈடுபட்டதற்குக் காரணம் குடும்பச் சண்டையாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இது தொடர்பாக கார் டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். அலியின் நண்பர் அப்துல்லா ஃபர்ஹாதும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் செல்வாக்கு மிக்க நடிகர் ஒருவர் இருக்கலாம் என்று பங்களாதேஷ் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், உடல் பிரேத பரிசோதனைக்காக சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (எஸ்எஸ்எம்சிஎச்) அனுப்பப்பட்டுள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.