நடிகர் சூர்யாவுடன் அதிகாலையில் சந்திப்பு நிகழ்த்தியதுடன் அவருடன் காபி பருகிய புகைப்படங்களை வெளியிட்டு பிரபல சீனியர் நடிகை வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா சரத்குமார், காலை வேளையில் உடற் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், சூர்யாவை சந்தித்துள்ளார். அப்போது சூர்யாவுடன் காலையில் ஒரு காபி அருந்தியுள்ளார். அந்த சமயம் இருவரும் உட்கார்ந்து காபி பருகும் புகைப்படங்களையும், இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களையும் ராதிகா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமது அந்த பதிவில், “ஹேண்ட்சம் சூர்யாவுடன் காலையில் வொர்க் அவுட் முடிந்த கையோடு ஒரு காபி” என குறிப்பிட்டுள்ளா ராதிகா சரத்குமார்.
‘சந்திப்போமா’, ‘காதலே நிம்மதி’, ‘உயிரிலே கலந்தது’, ‘சிங்கம்-3’ உள்ளிட்ட சூர்யாவின் சில திரைப்படங்களில் ராதிகா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சூர்யாவின் தந்தை சிவகுமாருடன் ‘பாசப்பறவைகள்’ உள்ளிட்ட பல படங்களில் ராதிகா இணைந்து நடித்துள்ளார்.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராதிகா, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிக்கும் முன்னணி நடிகையாகவும், திரைப்பட நடிகையாகவும் வெற்றி நடைபோடுகிறார் நடிகை ராதிகா.
தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்றிருந்த ராதிகாவுக்கு, அவர் திரைக்கு வந்து 43 வருடம் நிறைவு பெற்றதை ஒட்டி கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திலும் ராதிகா நடிக்கிறார்.
சூர்யாவை பொறுத்தவரை, கவுதம் மேனன் இயக்கத்தில் நவரசா ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சூர்யாவின் ஜெய்பீம் பட போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இதனிடையே இயக்குநர் பாணிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கிறார்.
அத்துடன் சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பிலான அடுத்தடுத்த 4 படங்கள் அடுத்தடுத்த 4 மாதங்களில் அமேசான் ஓடிடியில் வெளியாகின்றன. அதில் சசிகுமாருடன் இணைந்து உடன்பிறப்பு எனும் படத்தில் ஜோதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.