பிரபல கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 ஆம் தேதி மரணமடைந்தார். இளம் வயதிலேயே அவர் நம்மை விட்டுப்பிரிந்தது பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவிற்கும், நடிகை மேக்னா ராஜிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது மேக்னா ராஜ் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து தனது குழந்தையின் முகத்தை பார்க்காமல் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தது பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து அவரது மனைவி மேக்னா ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், சிரு, நான் மீண்டும் மீண்டும் முயற்சித்தும், நான் உன்னிடம் சொல்லவேண்டியவற்றை குறிப்பிட வார்த்தைகள் கைவரவில்லை. என்னுடைய நண்பா, காதலா, எனது இணையே, நம்பிக்கையே, கணவரே - நீ இதனை விட உயர்ந்தவன். நீ என் உயிரின் ஒரு பகுதி சிரு.
நான் வாசலை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நீ வராமல் இருப்பது, விவரிக்க முடியாத வலி ஒன்று என் உயிரை தாக்குகிறது. ஒருநாளில் உன்னைத் தொடாத ஒவ்வொரு நிமிடமும் என் இதயத்தில் கடினமான உணர்வு. அது மெதுவான, வலிமிகுந்த ஆயிரம் மரணங்களை போன்றது. ஆனால் நீ என்னை சுற்றி இருப்பது போன்ற ஒரு மாய பிம்பம். ஒவ்வொரு முறையும் நான் சக்தியற்றவளாக உணரும்போது நீ என் அருகில் பாதுகாப்பு ஏஞ்சலாக இருக்கிறாய்.
நம் குழந்தை நீ எனக்கு அளித்துவிட்டு போன நம் காதலின் சின்னம். நான் எப்பொழுதுமே உனக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். இந்த உலகத்துக்கு உன்னை குழந்தையின் வாயிலாக மீண்டும் அழைத்து வர காத்திருக்கிறேன். உன்னை அணைத்துக்கொள்ள, உன் சிரிப்பை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். நீ என் மூச்சுள்ளவரை வாழ்வாய். நீன் என்னுள் இருக்கிறாய். என்று குறிப்பிட்டுள்ளார்.