90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும் ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என தமிழ் மொழியிலும் இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் மீனா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் பகிர்ந்து வரும் சூழலில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, திரை உலகில் கால் பதித்து தற்போது 40 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.
சமீபத்தில், 40 ஆண்டுகள் சினிமா உலகில் நடிகை மீனா நிறைவு செய்ததையொட்டி Behindwoods சார்பில் Meena 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மீனா, ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடிக்காதது குறித்த கேள்விக்கு, "விஜய்யுடன் நடிக்க பிரியமுடன் படத்தில் வாய்ப்பு வந்தது. கால்சீட் இல்லாததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. மேலும் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடிக்க வேண்டியது. அந்த படத்தின் ஒரிஜினல் மலையாள பதிப்பில் ஹீரோயினாக நான் தான் நடித்திருப்பேன். உடனடியாக 20 நாட்கள் கால்சீட் கேட்டதாலும், அப்போது மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்ததாலும், ப்ரண்ட்ஸ் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இரண்டு மாதங்கள் கழித்து கால்சீட் கேட்டிருந்தால் ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்திருப்பேன்" என மீனா பதில் அளித்தார்.