மாஸ்டர் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகையான மாளவிகா மோகனன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தைப் பெற்றுள்ளது.
அறிமுகம்…
பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனின் மகள் ஆவார். ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.
பேட்ட + மாஸ்டர்….
ஆனால் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பரவலாக அறிந்து கொண்டது விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலமாகதான். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். அவர் நடித்திருந்த சாரு கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. மாஸ்டருக்குப் பிறகு அவர் தனுஷோடு நடித்துள்ள மாறன் திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படத்தில் மாளவிகா பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம்….
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் மாளவிகா முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
பழிவாங்கும் pimples….
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படமும், அது சம்மந்தமான பதிவும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த பதிவில் "நேற்று எனக்கு ஒரு முக்கியமான ஷூட்டிங் இருந்தது. ஆனால் என்னைப் பழிவாங்கும் விதமாக இந்த பிம்ப்பிள்ஸ் திடீரென தோன்றிவிட்டன. நான் ஆரோக்யமான உணவை சாப்பிடுகிறேன் மற்றும் உடல் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். புகைப்படங்களில் நடிகர் நடிகைகள் பெர்ஃபெக்டாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. நேற்று நான் கலந்துகொண்ட விளம்பர படத்தை பார்த்தால் நீங்கள் ’வாவ்… பளபளக்கும் தோல்’ என வியக்கலாம். ஆனால் எங்கள் ஒட்டுமொத்த குழுவும் அதற்காக கடின உழைப்பை அளித்துள்ளன. அதனால் இதுபோல பருக்கள் என்பது திடீரென்று வரும் விருந்தாளிகள் போலதான். அவைகளும் உங்களின் ஒரு பகுதிதான்" எனக் கூறியுள்ளார்.