நடிகை கஸ்தூரி என்றாலே பாராட்டுதலோ விமர்சனமோ மனதில் பட்டதை நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவார்.
இதனாலேயே அவருக்கு ஏராளமான ஃபாலோயர்களும் ரசிகர்களும் உண்டு. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயலை பாராட்டி அவர் தமது ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நடிகராக அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின், இந்த சட்டமன்ற தேர்தலின் மூலம் எம்.எல்.ஏ ஆனார். திமுக ஆட்சியமைக்க, ஸ்டாலின் முதல்வரானார்.
இதனை அடுத்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆனது முதலே தம் தொகுதியில் கொரோனா நிவாரண பணிகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள், முகாம்களை பார்வையிடுதல் என தினமும் ஒவ்வொரு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குப்பை கூலங்கள் நிறைந்த பகுதியானாலும் சரி, சாக்கடைகள் தேங்கி கிடக்கும் தெருக்களானாலும் சரி, அவரே சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து, உடனடியாக அவைகளை சீர்செய்ய உத்தரவிட்டு வருவதை காண முடிகிறது.
இந்நிலையில், “தன் தொகுதியின் அம்மா உணவகத்துக்குள் திடீரென உள்ளே நுழைந்த உதயநிதியை பார்த்ததும் அங்கு உண்டுகொண்டிருந்தவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களும் ஷாக் ஆகி நிற்க, உதயநிதியோ ஒரு ஸ்பூனை எடுத்த அம்மா உணவக உணவை உண்டு அதன் தரத்தை ஆய்வு செய்ததுடன், உணவு உண்டு கொண்டிருந்தவர்களிடமும் உணவு தரமாக இருக்கிறதா? என விசாரித்தார். பின்னர் அங்கிருந்த கிச்சனுக்குள் சென்று சமையலறை சுகாதாரமாவும் இருக்கிறதா? சமையலுக்கு தேவையான இருப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். மேலும் இந்த கொரோனா காலத்தில், அம்மா உணவகம் வந்து சாப்பிடுபவர்களுக்கு உணவு கிடைப்பதையும் அவை சுகாதாரமாக இருப்பதையும் எப்போது உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதுடன் இதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் வாக்களித்தார்.” என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி, "கற்பனையில் கூட நம்பியிருக்க மாட்டேன், நடக்கிறது . கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தந்தையும் மகனும் எடுத்துக்காட்டாய் செயல்படுகிறார்கள். வாழ்த்த சந்தோஷமாக இருக்கிறது. " என பதிவிட்டுள்ளார்.