மனசெல்லாம் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லட்சுமண். இதன் பின்னர், மலையாள சினிமாவிலும் சந்திரா நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த சீரியல்கள் இன்னும் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.
அதிலும் குறிப்பாக, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் அவரது நடிப்பு இன்னும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டிருந்தது. இந்த தொடரில் நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடரில், விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த 'என்னை தேடிக் காதல் என்ற வார்த்தை அனுப்பு' என்னும் பாடலின் வீடியோக்கள், சமூக வலைத்தளம் பிரபலமாக இல்லாத காலத்திலேயே சந்திராவுக்கு பெரிய அளவில் புகழை தேடித் தந்திருந்தது.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த சந்திரா, தனது நீண்ட நாள் காதலரான டோஸ் கிறிஸ்டி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். அதே போல, திருமணம் செய்து கொண்ட போது, சந்திராவுக்கு 38 வயது இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. டோஷ் கிறிஸ்டி மலையாளத்தில் பிரபல நடிகரும் ஆவார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் அசத்தலான தகவல் ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சந்திரா லட்சுமண் வெளியிட்டுள்ளார். அதன் படி, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும், வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் பதிவிட்ட சந்திரா, தங்களது குழந்தையை வரவேற்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சந்திரா லட்சுமண் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.