அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்த கதையை கூறிய போது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பால் அவர்களை சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், 'பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரை தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார்.
அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார். 2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். படத்தை வெளியிட நினைத்த போது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது 'கடாவர்' திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்துடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறது. இதற்காக நாங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடாவர் - ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம்.” என்றார்.
'கடாவர்' படத்திற்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில், “நான் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமா தான். 2010-களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்வையிட்ட போதுதான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக்கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்த திரைப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கினார்” என்றார்.
'கடாவர்' படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில், “கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும் போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளை பிள்ளையும், இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கரும் என்னை சந்தித்து 'கடாவர்' படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன்.
இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர்.
கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது. பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த 'கடாவர்' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.