தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நிலையில் அவர் விரைந்து குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "என்னது, விக்ரமன் பொய் சொன்னாரா?".. பழைய சம்பவத்தை தோண்டி எடுத்த போட்டியாளர்!!
சின்னத்திரையில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா. இவர் சக சின்னத்திரை நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தைக்காக நடிப்பில் இருந்து சற்று காலம் ஓய்வு எடுத்திருந்தார் ஆல்யா மானசா.
தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’இனியா’ என்ற சீரியலில் கதாநாயகியாக கம்பேக் கொடுத்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனுடன், சக்கர நாற்காலியில் அவர் ஷூட்டிங் செல்லும் வீடியோக்களும் வெளியாகி பலரையும் கவலைகொள்ள செய்திருந்தது. இந்நிலையில் தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக ஆல்யா மானசா உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.
இது குறித்து ஆல்யா மானசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதி உள்ள பதிவில்,"அறுவை சிகிச்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. ஆனாலும், சஞ்சீவின் மனைவியாக இருப்பதால் நான் பாக்கியசாலி. அவர் எப்போதும் என்னை கவனித்துக்கொள்ள தவறியதே இல்லை. என்னுடைய நல்ல மற்றும் மோசமான தருணங்களில் எனக்காகவே இருந்திருக்கிறார். அவர் என்னை எப்போதும் ஒரு சுமையாக பார்த்ததில்லை. என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருப்பது அவரால் தான்.
அவர் ஒவ்வொரு நொடியும் என்னை கவனித்துக்கொள்கிறார். அவர் காயப்பட்டால் நான் அவருடைய வலியை உணருவதை அவர் விரும்பவில்லை. அதேபோல என் வலியை நான் ஒருபோதும் உணர விடமாட்டார். சஞ்சீவ் கடவுள் எனக்காக அனுப்பிய பரிசு" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் ஆல்யா மானசா விரைந்து நலம்பெறவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | மாறுபட்ட தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் & நானி.. இணையத்தில் வைரலாகும் வேறமாரி 'தசரா' BTS!