நடிகர் விஷ்ணு விஷால் மது அருந்திவிட்டு தினமும் ரகளையில் ஈடுபடுவதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தனர். இந்த செய்தி பல ஊடகங்களிலும் வைரலானது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு செயலாளர் ரங்க பாபு அளித்த புகாரில் "நடிகர் விஷ்ணு விஷால் வந்த நாளில் இருந்து தினமும் இரவு குடித்துவிட்டு மிகவும் மோசமான வகையில் நடந்து கொள்கிறார். பல ஆண் நண்பர்களும், பெண்களும் வீட்டுக்கு வருகின்றனர். அதிக சத்தம் எழுப்பும் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் போலீசாரை அழைத்தபோது, அவர் போலீசாரை தரக்குறைவாக மோசமான வார்த்தைகளால் திட்டினார்" என்று புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது பக்க நியாயத்தை தற்போது கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது "நான் தினமும் ஷுட்டிங்கில் 300 பேருடன் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே எனது பெற்றோரின் அறிவுறுத்தலின்படி கடந்த நவம்பர் மாதம் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்தேன். அங்கே தனியே தங்கி வருகிறேன். FIR என்ற படத்தை தயாரிப்பதால் தினமும் அங்கு மீட்டிங் நடந்து வருகிறது. மேலும் என்னுடைய உடற்பயிற்சி சாதனங்களை அந்த வீட்டினுள் வைத்து பயிற்சி செய்து வருகிறேன்.
நான் இங்கு வந்தது முதல் அப்பார்ட்மெண்ட் முதலாளி என் மீது குறை கூறி வருகிறார். மேலும் என் ஊழியர்கள் மற்றும் எனது வீட்டிற்கு என்னை பார்க்க வரும் நபர்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார். அன்று என்னுடைய படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள். எனவே எனது அப்பார்ட்மெண்டில் ஒரு சிறிய கெட் டூகெதர் வைவைக்கப்பட்டது. மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்வதால் மதுவை நான் தொடுவதில்லை. ஆனால் அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மது பரிமாறப்பட்டது உண்மையே. ஆனால் அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
எங்களுடைய பிரைவசி தடுக்கப்பட்டது. நான் போலீசிடம் பொறுமையாக தான் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால் அப்பார்ட்மெண்டின் உரிமையாளர் என்னிடம் மோசமான ஒரு வார்த்தை கூற, எந்த மனிதரைப் போலவும் அந்த நேரத்தில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நானும் சில வார்த்தைகளை கூறினேன். போலீசுக்கும் என் மீது தவறு இல்லை என்பது தெரியும். அதனால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால் என்ன மனிதருக்கு தான் கோபம் வராது உங்களுக்கு வராதா? நான் மீடியாவில் இருப்பதால் உடனே என்னை பற்றிய விஷயங்களை உண்மை எதுவென்று தெரியாத முன்பே தீர்மானித்து விடாதீர்கள்.
நான் பொதுவாக இப்படிப்பட்ட விளக்கங்களை கொடுப்பதில்லை. ஆனால் என்னை குடிகாரன் என்றும் கூத்தாடி என்றும் சொல்வது எனது துறை மற்றும் தொழிலை அவமதிப்பது போல் இருக்கிறது. அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அந்த அப்பார்ட்மெண்ட் உரிமையாளரை பற்றி ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால் அவர் எனது தந்தையின் வயதில் இருப்பவர் அதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். கடைசியாக அந்த வீட்டிலிருந்து நான் வெளியேற முடிவு செய்து விட்டேன். எனது சூட்டிங் முடிவதற்காக தான் காத்துக்கொண்டிருந்தேன். இது என்னுடைய பலவீனம் அல்ல. இந்த தேவையில்லாத சண்டைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. எனது ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.