தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, அவன் இவன், துப்பறிவாளன், இரும்புத் திரை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார் விஷால்.
சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட திரைப்படங்கள் இதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த நிலையில், அடுத்ததாக 'லத்தி' திரைப்படம், டிசம்பர் 22 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.
புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். லத்தி திரைப்படம் படம் ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.
லத்தி படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகர் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் விஷால் அளித்துள்ளார்.
இதில், தன்னை சுற்றி அரங்கேறி இருந்த வதந்திகள் குறித்தும், அரசியல் குறித்தும், சினிமாவில் உள்ள தனது நண்பர்கள் உள்ளிட்டோர் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை விஷால் பகிர்ந்து கொண்டார். அப்போது, நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தில் வில்லனாக நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்தும் சில கருத்துக்களை விஷால் பகிர்ந்து கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் விஜய் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதில், விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் ஒன்று பரவலாக பரவி வந்தது.
தற்போது தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், "இல்லை" என தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவது பேசிய நடிகர் விஷால், "இப்ப நான் பேசினா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கோவிச்சுப்பாங்க. முதல்ல துப்பறிவாளன் 2 நான் முடிக்கணும். அத முடிச்சுட்டு நடிக்கிற Commitments இருக்கு.
இந்த நடிப்பு இது எதுவும் இல்லாம வெறும் ஒரு டைரக்டரா, விஜய்யை போய் சந்திச்சு ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி ஒரு படம் பண்ணனும்ன்னு எனக்கு நீண்ட நாள் ஆசை" என விஷால் தெரிவித்தார். அதே போல, 2024 ஆம் ஆண்டு இந்த படத்தின் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.