“எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் இருந்த நடிகர் விஷாலிடம் துப்பறிவாளன் உட்பட அவரது அடுத்த படங்கள் பற்றி உரையாடியதிலிருந்து …
முன்பை போல் விஷாலை அதிகம் வெளியில் பார்க்க முடிவதில்லையே , உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்து விட நினைக்கிறீர்களா ?
அப்படியெல்லாம் இல்லை வேலையை எப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இப்போது நடிகர் சங்க வேலைகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். கூடிய விரைவில் இறுதி தீர்ப்பு வரப்போகிறது இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது. இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கிறது. கண்டிப்பாக அதையும் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன்.
அடுத்த தீபாவளி உங்களுக்கு தலை தீபாவளியாக இருக்குமா ?
அஜித் சார் படம் பற்றி கேட்கிறீர்களா ? ( சிரித்து விட்டு) எனக்கே தெரியவில்லை. என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள். நடக்கும் போது அதுவே தானாக நடக்குமென நம்புகிறேன். நடக்க வேண்டியது கண்டிப்பாக நடக்கும்.
தொடர்ந்து உங்கள் சொந்த தயாரிப்பில் நடித்துவிட்டு, இப்போது வெளித்தயாரிப்பில் நடிப்பது எப்படி இருக்கிறது ?
ரொம்ப நன்றாக இருக்கிறது இப்போது அடுத்த படமும் வினோத் உடன் இணைகிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் நடிகருக்கு ஒரு புரிதல் வேண்டும். அது வினோத்திடம் இருக்கிறது. சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ரசித்து ரசித்து செய்கிறார். அவருடன் வருடம் ஒரு படம் செய்வதாக சத்தியம் செய்து தந்திருக்கிறேன்.
விஷால் ஃபிலிம் பேக்டரியில் ‘வீரமே வாகை சூடும்’ கிட்டதட்ட முடிந்து விட்டது. ஜனவரி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். வெளி தயாரிப்பிலும் நடிக்க வேண்டும் அப்போது தான் சினிமா நன்றாக இருக்கும்.
துப்பறிவாளன் 2 எப்போது ?
இதோ ஜனவரியில் மீண்டும் போகிறோம் ஏப்ரலில் படம் வந்துவிடும். அக்டோபரில் எனது உண்மையான கனவுப்படத்தை துவங்கவுள்ளேன். அது எனது முதல் இயக்கமாக இருக்கும் துப்பறிவாளனை பொறுத்துவரை அது அநாதையாக விட்டுவிடக்கூடாது என தத்தெடுத்த குழந்தை. அதில் நிறைய நடந்தது. அக்டோபரில் இயக்குநராக எனது பயணம் துவங்கும்.
அந்தப்படம் உங்கள் சொந்த தயாரிப்பாக இருக்குமா ?
கண்டிப்பாக VFF நிறுவனமே ஒரு கோபத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வெறும் 10000 ரூபாய் கையில் வைத்து கொண்டுதான் VFF ஆரம்பித்தேன். VFF என்பது விஷால் ஃபிலிம் பேக்டரி அல்ல வென்ஞ்சன்ஸ் ஃபிலிம் பேக்டரி. எனக்கு நடந்த துரோகங்கள் கோப்பைகளில் தான் இந்த நிறுவனமே ஆரம்பித்தேன் இயக்குநர் தவறு செய்யும்போது அதை சரிசெய்ய வேண்டியது என் கடமை. துப்பறிவாளன் 2 வுக்கு அவரை லண்டனுக்கு கூட்டி சென்றிருக்க கூடாது அது என் தவறு. இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்.
நிறைய துரோகங்கள், கூட இருந்தவர்களே குழி பறிப்பது இதைப்பற்றியெல்லாம் உங்கள் கருத்து ?
நல்ல விசயம் தான் அரசியலுக்கு வரும் முன்னர் இதைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிற விசயங்கள் பள்ளியிலோ புத்தகத்திலோ கிடைக்காது. இது மாதிரி சம்பங்கள் தான் பாடத்தை கற்றுக்கொடுக்கின்றது.
நடிகர் சங்கம் இந்த வருடம் நிறைவடைந்து விடுமா ?
ஒரு நாலுமாதம் டைம் கொடுத்திருந்தால் அப்போதே முடித்திருப்போம் அனைத்துமே முடிந்துவிட்டிருந்தது. இப்போது அதில் போட்டிருந்த கம்பிகளெல்லாம் துருப்பிடித்து கிடக்கிறது. இப்போது சரி செய்யவே 12 கோடி ஆகும். அதைப்பார்க்க அந்தப்பக்கம் போகவே கஷ்டமாக இருக்கிறது. இதோ தீர்ப்பு வரப்போகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் சீக்கிரமே முடிந்து விடும்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். எல்லோரும் குடும்பத்துடன் கவனமாக கொண்டாடுங்கள்.
இவ்வாறு விஷால் கூறினார்.