தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23 முதல் துவங்கி நடைபெற்று வருவதாக அஜய் ஞானமுத்து ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விக்ரமுக்கு லேசான அறிகுறி உள்ளதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி சியான் விக்ரம் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் நடிகர் அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். அதில் "கொரோனா பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை எடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். முககவசம் அணிந்துகொள்ள மறக்காதீர். ராம பக்த ஹனுமான் கி, ஜெய்!" என குறிப்பிட்டு இருந்தார். இச்சூழலில் கோலிவுட்டின் மற்றொரு நடிகரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.