காங்கிரஸ் எம்பியும் வசந்த் அண்ட் கோவின் நிறுவனருமான எச்.வசந்தகுமார் கொரொனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்ததாக அவரது மகன் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவரது சொந்த ஊரான கன்னியாக்குமரி மாவட்டம் அகஸ்தீவரத்துக்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், எனது அப்பா, 50 வருஷங்களுக்கு முன்னாடி தனது 20வயதில் கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு சென்னை வந்தார். 50 வருஷங்களுக்கு பிறகு அவரது கனவுகள் மெய்பட்ட நிலையில், தனது சொந்த ஊருக்கு நிறைவான மனிதராக ஓய்வெடுக்க சென்றுவிட்டார் என்று உருக்கமாக தெரிவித்தார்.