விஜய் சேதுபதி நடிப்பில் "துக்ளக் தர்பார்" படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி இருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர், இவர்களுடன் நடிகர் பார்த்திபன், நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி உள்ளன. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் Think Music நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Think Music நிறுவனம் இந்த படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் நான்கு பாடல்களை இந்த ஆல்பம் கொண்டுள்ளது. "அரசியல் கேடி, திராவிட கோனே, காமி காமி, அண்ணாத்த சேதி" என மொத்தம் 4 பாடல்களும் வேறு வேறு வகையில் அமைந்துள்ளது. இந்த பாடல்களை பாடலாசிரியர்கள் கார்த்திக் நேத்தா, கார்க்கி எழுதியுள்ளனர்.
இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது. முதலில் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. பின்னர் சில காரணங்களால் இந்த உரிமை சன் டிவிக்கு கைமாற்றப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் துக்ளக் தர்பார் திரைப்படம், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.