நடிகர் வடிவேலு மாமன்னன் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி
கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகும் மாமன்னன் படத்தின் அறிவிப்பு வெளியானது.இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வடிவேலுவின் ரி எண்ட்ரி
இந்த படத்தில் வடிவேலு நடிக்கும் நிலையில் அவருக்கு முன்னுரிமை கொடுத்து மூத்த நடிகர் என்ற முறையில் போஸ்டரில் அவரின் பெயரை முதலில் போட்டு படக்குழுவினர் கௌரவப் படுத்தியுள்ளனர். நடிகர் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் தயாராகி வரும் நிலையில், அதன் பிறகு வடிவேலு ஒப்புக்கொண்ட இரண்டாவது படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது. இப்படி சில ஆண்டுகளாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
மாரி செல்வராஜ் பகிர்ந்த புகைப்படம்
படத்தின் போஸ்டரும் தலைப்பும் வெளியாகி ஒரு புறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அறிவிப்பு வெளியான அன்று மாலை இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ‘நிறைவேறிய ஒரு தொடர் கனவு மாமன்னனில் வைகைபுயல் ‘ எனக் கூறி இருந்தார். அப்போதே அந்த புகைப்படம் இணையத்தில் பரவலாகக் கவனம் பெற்றது.
மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் வடிவேலு
இப்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து அவருக்குப் படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்துள்ளனர். படக்குழுவினரோடு வடிவேலு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.