இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் 2006 ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.
இதன் இரண்டாவது பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. பிரம்மாண்ட செட் அமைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்தார்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலுவால் 7 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். எனவே வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடப்பட்டது. இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படமும் பாதியிலேயே நின்று போனது.
இந்நிலையில் இன்று (27.08.2021) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள், “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் திரு.வடிவேல் மீது புகார் அளித்திருந்தார்.
மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு. வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் முடிவுக்கு வருகின்றன. மேலும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.