கேரள மாநிலத்தை சேர்ந்தவர் காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம். இவர் ஆரம்பத்தில் டிவி ஷோக்களில் தோன்றி தனது திறமையால் மெல்ல வளர்ந்து தற்போது ஏராளமான திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் நடித்து வருகிறார்.
கேரள மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருக்கும் உல்லாஸ் வீட்டில் கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
நடிகர் உல்லாஸ் பந்தளம் தனது மனைவி காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் உல்லாஸ் வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கே மேல் தளத்தில் இருந்த அறை ஒன்றில் உல்லாஸின் மனைவி ஆஷா விபரீத முடிவை எடுத்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. வீட்டிற்குள்ளேயே மனைவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார் உல்லாஸ். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் தற்போது குடி பெயர்ந்துள்ள வீடு புதிய வீடு என்றும், சில அறை அதிகம் பயன்படாமல் பூட்டி இருந்ததால் அங்கே மனைவி போயிருக்க மாட்டார் என கருதி காணாமல் போனதாக உல்லாஸ் போலீஸ் நிலையத்தில் புகாரளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, ஆஷா விபரீத முடிவை எடுப்பதற்கு முன் சிறிதாக சண்டை ஒன்று தனக்கும் தனது மனைவிக்கு இடையே நடைபெற்றதாகவும் ஆனால் அது சாதாரணமான ஒன்று தான் என்றும் உல்லாஸ் கூறி உள்ளார். மேலும் அன்றைய தினம் இரவு தங்களின் இரண்டு குழந்தைகளுடன் மேல் மாடிக்கு சென்று ஆஷா தூங்கிய பிறகு, காணாமல் போனதை அறிந்து போலீஸ் நிலையத்திலும் உல்லாஸ் புகார் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இது தொடர்பாக ஆஷாவின் தந்தை சிவானந்தன் போலீசார் விசாரணையில் சில விஷயங்களை கூறி உள்ளார். அதன்படி, தனது மகளுக்கும், அவரது கணவர் உல்லாஸ் பந்தளத்திற்கும் இடையே குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார். அதே போல, மன உளைச்சல் காரணமாக மகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தனது மருமகன் மீது தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ எந்தவித சந்தேகமும், புகாரும் இல்லை என்றும் சிவானந்தன் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் தான், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் புது வீட்டிற்கு உல்லாஸ் குடி பெயர்ந்துள்ளார். அப்படி ஒரு சூழலில், மனைவி உயிரிழந்து போனது உல்லாஸை கடுமையாக பாதித்துள்ளது. மலையாள சினி உலகில் இந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் உல்லாஸ்க்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி வருகின்றனர்.