நடிகர் தவசி மருத்துவமனையில் இருந்து, தனது உடல்நிலை குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தவசி. இவரின் முரட்டுத்தனமான தோற்றமும், நகைச்சுவையான பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் சொல்லும், கருப்பன் குசும்பம் என்கிற வசனம் மீம் மெட்டிரியலாக மாறியது.
இந்நிலையில் தற்போது நடிகர் தவசி மருத்துவமனையில் இருந்தபடி, பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''நான் ஷூட்டிங் ஷூட்டிங் என்றே, இருந்ததால், இதுகுறித்து தெரியவில்லை. ஒருநாள் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் டெஸ்ட் எடுத்து பார்த்தோம். அப்போதுதான் இந்த கேன்சர் கட்டி இருப்பது தெரிய வந்தது. ஆரம்பத்தில் இதை மாத்திரைகள் மற்றும் ஊசியால் சரி செய்துவிடலாம் என்று சிகிச்சை எடுத்தோம். ஆனால், பெரிதாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து மருத்துவர் சரவணன் அவர்கள் பேசிய தொலைக்காட்சி வீடியோவை கண்டபிறகு, அவரை தொடர்பு கொண்டு, இங்கு அனுமதிக்கப்பட்டேன். சரவணன் அவர்கள் முழுமையாக என்னை சரி செய்துவிடுவதாக சொல்லி இருக்கிறார்'' என தெரிவித்த தவசி, ''மீண்டும் கருப்பனின் குசும்பை பார்க்கலாம்'' என நம்பிக்கையோடு கூறினார்.