பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீனிவாச மூர்த்தி நேற்று காலை சென்னையில் மாரடைப்பால் அவரது வீட்டில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீனிவாச மூர்த்தி நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் போன்ற தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். சூர்யா நடித்த கஜினி, சிங்கம் சீரிஸ், 24 ஆகிய படங்களுக்கு ஸ்ரீனிவாச மூர்த்தி தான் டப்பிங் பேசியுள்ளார்.
மலையாளத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட மோகன் லால் படங்களுக்கும் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். ஆல வைகுண்ட புரமுலு படத்தில் நடிகர் ஜெயராமுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூர்யா தமது டிவிட்டர் பக்கத்தில் ஶ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு ஒரு இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "இது எனக்கு மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு! ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்களின் குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன்! சீக்கிரமே சென்றுவிட்டார்." என சூர்யா உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்