2010ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
இச்சோதனைக்குப் பின்னர், 2007 - 2008 & 2008- 2009 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியாக சுமார் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரியை சூர்யா செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை ஆணையிட்டது. அதில் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சூர்யாவுக்கு அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வருமான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டுமென வருமான வரி தீர்ப்பாயத்திலும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று (17.08.2021) விசாரனைக்கு வந்ததில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி சூர்யா தரப்பு சார்பில் ராஜசேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதில் வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இன்றைய நாள் வரை நாங்கள் எந்த வரி பாக்கியும் வைக்கவில்லை, வழக்கானது வருமான வரிக்கான வட்டியை திரும்ப பெறுவதற்கானது மட்டுமே. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.