வாரிசு படத்தில் இணைந்துள்ளது பற்றி பிரபல நடிகர் ஒருவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவு, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் 66 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இதன் படப்பிடிப்பும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷ்யாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
மேலும், வாரிசு படத்தின் மூலம் முதல் முறையாக நடிகர் விஜய் படத்திற்கு இசையமைத்தும் வருகிறார் பிரபல இசை அமைப்பாளர் தமன். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வாரிசு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் வாரிசு படத்தில் நடித்து வருவதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீமன் விஜய்யுடன் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவருக்கு நெருங்கிய நண்பர் ஆகவும் ஸ்ரீமன் இருக்கும் நிலையில், தற்போது வாரிசு படத்திலும் அவர் இணைந்து நடித்து வருகிறார்.
இது தொடர்பாக ட்விட்டரில் இயக்குனர் வம்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ரீமன், தனது கேப்ஷனில், "வாரிசு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தளபதியுடன் எப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நான் தவற விடமாட்டேன். தயாரிப்பாளர் தில்ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோருக்கு நன்றி.
நன்றி நண்பா, என் ஆருயிர் விஜிமா, உங்களின் ஆதரவை என்னால் மறக்க முடியாது" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.