தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜக்களில் ஒருவரும் நெல்லை மாவட்டம் சிங்கப்பட்டி ஜமீனின் 31 வது ராஜாவுமான அய்யா முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சிங்கப்பட்டி அருகில் உள்ள சின்ன பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தார்.
1200 வருடங்கள் பழமை வாய்ந்த சிங்கப்பட்டி ஜமீனின் கடைசி மன்னரும் இவர்தான். அந்த பகுதியில் வாழும் மக்கள் அவரை ஒரு சூப்பர் ஹீரோவை போலவே கருதுகின்றனர். தனது மக்களிடம் அத்தனை அன்பும், மரியாதையும் பெற்று அவர் வாழ்ந்து வந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படம் இவரது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
89 வயதாகும் சிங்கப்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தற்போது வயது முதிர்ந்த காலத்தில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மரணம் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கடைசி மன்னராய் தங்களுடன் வாழ்ந்த அவரது நினைவுகள் என்றும் அழியாது என்று கூறி அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் "சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.