மத்திய அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூகவலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
நடிகர் சித்தார்த்தின் ட்வீட் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அவர்கள் எல்லாம் விளம்பரத்துக்காக பல கேள்விகள் முன் வைப்பார்கள். இதற்கு பதில் கூற விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சித்தார்த், ''அவர் நான் யார் என்று கேட்கிறார். கவலையில்லை. அவருடைய அரசு தான் எனக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதளிப்பதாக சொன்னது. இதனை கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை விருது வழங்கவில்லை.
எனக்கு விளம்பரத்துக்காக பேச வேண்டிய தேவையில்லை. நான் எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன். நேர்மையாக எனது சொந்த முயற்சியால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.