சென்னை: ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்ருக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமரின் அலுவல் தாமதமானது. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பாஜக ஆதரவு தளத்தில் இருந்து குவிந்தன. பிரதமர் வரும் வ்ழி பற்றிய தகவல் மாநில காவல் துறைக்கு மட்டுமே தெரியும், இந்த தகவல் எப்படி போராட்டக்காரர்களுக்கு தெரிந்தது? என்கிற ரீதியில் பஞ்சாப் அரசை பலர் விமர்சித்தனர்.
இச்சூழலில் we stand with Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்''. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சாய்னா நேவாலின் டிவீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பதிலளித்திருந்தார். இந்த டிவீட்டிற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன. குறிப்பாக நடிகை குஷ்பு ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் மீண்டும் இன்று (10.01.2022) டிவீட் செய்துள்ளார். அதில் தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.