மகன் ஆர்யன் கான் மீதான தொடர் சர்ச்சைக்குப்பிறகு நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கானுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் 'பிகில்' வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தினார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் ,சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் ஷாருக்கான் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர், அட்லீ படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் 2-ஆம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
ஷாருக்கான் மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. ஆர்யன் கான் மீதான விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஷாருக்கான் தனது மகனை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால், ஷாருக்கான், நடித்துக்கொண்டிருந்த படங்கள், படப்பிடிப்பு சார்ந்த பணிகள் அனைத்தும் தடைபட்டது. மகனின் ஜாமீனுக்காக சிறைக்கு அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். ஒரு மாத காலம் சிறையில் இருந்த ஆர்யன் கான், அக்டோபர் 30ம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் ஷாருக்கான் எந்தப் பதிவும் செய்யாமல் அமைதி காத்து வந்தார். அவர் கடைசியாக செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை மட்டும் தெரிவித்திருந்தார். நான்கு மாதங்களுக்கு பிறகு ஷாருக்கான் குதூகலமடைந்துள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்துள்ள எல்ஜி விளம்பரத்தின் வீடியோவை பகிர்ந்தார். அவர் பதிவிட்ட 1 மணிநேரத்திலேயே 11 ஆயிரம் கமெண்டுகளுக்குமேல் குவிந்துள்ளன. அதில் அவரது ரசிகர்கள் 'Welcome Shahrukh'என பதிவிட்டு உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். He Back என்றும் குறிப்பிட்டுள்ளனர்.