ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார். இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து சினிமா துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவளித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார், அதில், "நமது பெருமை மிகு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு ‘ஜெய் பீம்’ படத்திற்கு, மிகப்பெரிய ஜாம்பவான்கள், கலைவித்தகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டார்கள். அதைத் தாண்டி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் சில படங்கள் கை தட்டுவதற்கும், விசில் அடிப்பதற்கும், ரசிப்பதற்குமான படமாக இருக்கும். சில படங்கள் பாராட்டுதலுக்குரிய படமாக இருக்கும். மிகச் சில படங்களே போற்றுதலுக்குரிய படங்களாக இருக்கும். அதில் முக்கியமான இடத்தை 'ஜெய் பீம்' படம் பெற்றுள்ளது.
சூர்யா, ஞானவேல் உள்ளிட்ட அத்தனை 'ஜெய் பீம்' திரைக்கலைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். நிறைய பேர் பாராட்டிவிட்டார்கள். இப்போது என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் சில பேருக்குத் தெரிவிப்பதற்காக இந்தப் பதிவு. சூர்யாவுக்கு வந்த பிரச்சனைகளுக்கு ஆதரவாக திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் குரல் கொடுக்கிறார்கள். இயக்குநர் இமயம் பாரதிராஜா குரல் கொடுத்திருக்கிறார். அவர் குரல் கொடுத்திருப்பது ரொம்ப சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருக்கிறது. பாரதிராஜா சார் கொடுத்த அறிக்கையைத் தாண்டி ஒரு விஷயத்தைச் சொல்லிவிட முடியாது. பாரதிராஜா மிக அற்புதமாகச் சொல்லியிருக்கார்.
திரைக்கலைஞர்களுக்கு வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்குப் பிரச்சனை வந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சமூகநீதிக்காக, சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கும்போது, பிரச்சனைகள் வரும் போது, திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் முன் நிற்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிகிறேன்". என்று சூர்யாவிற்கு தனது ஆதரவை வீடியோ வழியாக தெரிவித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ்.