பிரபல வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு காமெடி நடிகர் சதீஷ் உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடக வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன், மரடைப்பால் இன்று(ஜூன்.10) பிற்பகல் சென்னையில் காலமானார். ‘கிரேஸி மோகன்’ என்றழைக்கப்படும் மோகன் ரங்கமாச்சாரி(67), கிரேஸி கிரியேஷன்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் பல நகைச்சுவை மேடை நாடகங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
நகைச்சுவை நாடகங்கள் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் பணியாற்றியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அவ்வை சண்முகி’, ‘சதிலீலாவதி’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘காதலா காதலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நகைச்சுவை கலைச்சேவையை பாராட்டி, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கிரேஸி மோகனின் மறைவு அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது வாழ்விற்கு அர்த்தம் தந்த குருவான கிரேஸி மோகனின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டில், ‘என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து... என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து... என் மாதாவாக... பிதாவாக... குருவாக... இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்......’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.