நடிகர் சரத்குமார் புனித் ராஜ்குமாரின் இறுதிப் படமான ஜேம்ஸ் நாளை வெளியாகவுள்ள நிலையில் அவரைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
மார்ச், எப்ரல்ல fans-க்கு செம்ம ட்ரீட் … விக்னேஷ் சிவன் படமும்.. அவரே பகிர்ந்த வைரல் ஸ்டேட்டஸ்!
ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மறைவு
கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனீத்தின் இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
புனித்தின் கடைசி படம்
புனீத் மறைவதற்கு முன்னர் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் ஜேம்ஸ். இந்த படம் மார்ச் 17 (நாளை) ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் புனித்துக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ் சிவகுமார் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தில் புனித்தோடு சரத்குமார், பிரியா ஆனந்த், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.
சரத்குமாரின் நினைவஞ்சலி
இந்நிலையில் புனீத்தோடு ஜேம்ஸ் படத்தில் நடித்துள்ள சரத்குமார் நாளை இந்த படம் ரிலீஸாக உள்ளதை அடுத்து உருக்கமான ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘’நாளை அப்புவாரின்(புனித்தின் செல்லப் பெயர்) பிறந்தநாள் மற்றும் அவரின் கடைசி படமான ஜேம்ஸின் ரிலீஸ். நான் வார்த்தைகள் இல்லாமல் பல விதமான, எண்ணங்களால் முடங்கிக் கிடக்கிறேன். படத்தின் ரிலீஸுக்காக சந்தோஷப்படுவதா அல்லது அப்பு சொர்க்கத்தில் இருப்பதால் வருத்தப்படுவதா என்று குழம்பியுள்ளேன்.
அப்பு நான் உங்கள் இன்மையை உணர்கிறேன். உங்கள் பெயரைக் நினைப்பது கூட என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது, வார்த்தைகள் இல்லாமல் நான் திணறுகிறேன். கடந்த காலத்தில் நான் பல அன்பானவர்களையும் நெருக்கமானவர்களையும் இழந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் இருக்கும் இந்த மனநிலை விவரிக்க முடியாதது. நீங்கள் எண்ணங்களிலும் நினைவுகளிலும் என்றென்றும் வாழ்வீர்கள்.’ என்று கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கு கோரிக்கை
மேலும் அந்த பதிவில் ’முன்னதாக உங்கள் அப்பா ராஜ்குமாரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது உங்களோடு ஜேம்ஸில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜேம்ஸ் படப்பிடிப்புத் தளத்துக்கு வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வந்து எங்களுக்கு பரிமாறிய உங்களின் விருந்தோம்பல் என்றென்றும் என் நினைவுகளில் இருக்கும். அப்புவின் ரசிகர்கள் அனைவரும் நாளை திரையரங்குகளுக்குச் சென்று அவரை நாம் எவ்வளவு மிஸ் செய்கிறோம் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். லவ் யூ அப்பு’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.
வாவ்.. CWC புகழோட நடிக்குறத பத்தி.. பிரபல இளம் நடிகர் என்ன சொல்லிருக்காரு பாருங்க..